Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஒருமை பல்கலை குழு அறிக்கை தாக்கல்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

ஒருமை பல்கலை குழு அறிக்கை தாக்கல்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

ஒருமை பல்கலை குழு அறிக்கை தாக்கல்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

ஒருமை பல்கலை குழு அறிக்கை தாக்கல்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

ADDED : மே 13, 2010 01:12 AM


Google News

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளை, ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்றுவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கியது.

சென்னை மாநில கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.



இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்றுவது குறித்து ஆராய, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் பாஸ்கரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டது. இக்குழு தனது அறிக்கையை, முதல்வர் கருணாநிதியிடம் நேற்று அளித்தது. குழுவின் அறிக்கை, தமிழக அரசு இணையதளத்தில் www.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது.  அறிக்கை மீது கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் 10 நாட்களுக்குள், முதன்மை செயலர், உயர்கல்வித்துறை, தலைமை செயலகம், சென்னை - 9 என்ற முகவரிக்கு தங்களது கருத்துக்களை அனுப்பலாம்.



முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமி தலைமையிலான குழு, தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்லூரியின் வயது, கல்லூரி வளாக பரப்பளவு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் எண்ணிக்கை, "நாக்' தரச்சான்று உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை, ஒருமை பல்கலைக் கழகமாக மாற்றுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.  ஒரு கல்லூரியை ஒருமை பல்கலைக் கழகமாக மாற்றுவது தொடர்பாக, அக்கல்லூரி தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நிபுணர்கள் குழுவை கல்லூரிக்கு அனுப்பி ஆய்வு செய்யும். ஆய்வு அறிக்கையை கல்வி நிபுணர்கள், அரசு பிரதிநிதிகள் கொண்ட குழு பரிசீலித்து, ஒரு கல்லூரியை ஒருமை பல்கலைக் கழகமாக மாற்றுவது குறித்து முடிவு செய்யும்.



ஒருமை பல்கலைக் கழகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, மாதிரி விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அவற்றை மாநில உயர்கல்வி மன்ற இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துக்களை பெற வேண்டும். மாதிரி விதிமுறைகளில், ஒருமை பல்கலைக் கழகத்தின் நிர்வாக முறை, அதிகாரிகள் நியமன முறை, பாடத்திட்டம், பல்கலைக்கழக நிதி, ஆசிரியர் தேர்வு, மாணவர் சேர்க்கை முறை, கட்டண விவரம், கண்காணிப்பு முறை ஆகியவை இடம் பெறும். ஒருமை பல்கலைக் கழகத்தில் கண்டிப்பாக தொலைதூரக் கல்வி முறையில் பட்டங்கள் வழங்கக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us